சிறப்புக் கதைகள்
மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதரின் கற்றல் ஆர்வம்
திரு ரம்லி பின் புத்தே: மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதரின் கற்றல் ஆர்வம்
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் (IMDA) மக்கள் கழகத்தின் துடிப்பான முதுமைக்கால மன்றமும் (PAAAC) ஒவ்வோர் ஆண்டும் புதிய மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதர்களை (SIWA) நியமிக்கின்றன. சமூகத்தில் மின்னிலக்கமயமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து, சமவயதினருக்குத் தங்களது அறிவாற்றலைக் கற்றுக்கொடுப்பதில் ஆர்வமுள்ள மூத்தோர்கள் தூதர்களாக நியமிக்கப்படுகின்றனர். 2019-ல், 36 புதிய தூதர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவரை 200க்கும் மேலானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2019-ல் மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான 66 வயது திரு ரம்லி பின் புத்தே என்பவரை அண்மையில் சந்தித்து, அவரது வாழ்க்கை அனுபவம் பற்றியும், அவர் சமூகத்துடன் தனது அறிவாற்றலைப் பகிர்வதற்கான காரணத்தைப் பற்றியும் கேட்டறிந்தோம்.
உங்களது மின்னிலக்கப் பயணம் பற்றி சொல்லுங்கள். இந்தப் பயணம் எப்படித் தொடங்கியது?
நான் 1976-ல் பட்டம் பெற்றபோது என் பயணம் தொடங்கியது. இன்றிருப்பதுபோல அன்றைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் அவ்வளவு பிரபலமல்ல. இப்போது சிறு பிள்ளைகள் திறன்பேசிகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை அப்போது காணமுடியாது. கணினிகளும் அவ்வளவாகக் கட்டுப்படியாகாது. இருப்பினும், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனக்கொரு கணினியை எப்படியோ வாங்கிக்கொண்டேன்.
அந்தக் கணினியின் வர்த்தகச்சின்னம் நினைவில்லை. ஆனால் அது மிகவும் சாதாரணமானது. அதைப் பயன்படுத்த நான் சிலருக்கு முறைப்படியல்லாமல் கற்றுக் கொடுத்தேன். அதுவே நான் முதன்முதலில் அளித்த தகவல் தொழில்நுட்பப் பயிற்சி என்று சொல்லலாம்.
நீங்கள் சொல்வது சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் வெகு முன்பே மின்னிலக்கத் திறன்பெற்று, உங்களது அறிவாற்றலை மற்றவர்களிடம் பகிர விரும்புயிருக்கிறீர்கள்!
அந்தக் காலகட்டத்தில், புதிய பட்டதாரிகளான நாங்கள், சமூகத்தில் ஒரு திருப்பத்தை உண்டாக்க விரும்பினோம். நான் பட்டம் பெற்ற நாளிலிருந்தே அடித்தள அமைப்புகளில் ஈடுபாடு கொண்டிருக்கிறேன். முறைப்படியல்லாமல் தகவல் தொழில்நுட்பம் கற்றுக்கொடுத்த நான், அடித்தளத் தலைவர்களுடன் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியபோது, முறைப்படியான பயிற்சிக்கு மாறினேன்.
இந்த அனுபவம், மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதர் பணியில் உங்களை ஈடுபடச் செய்தது.
எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, வாழ்க்கையில் பரபரப்பைக் குறைக்க விரும்பி, 12 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தேன். நான் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தபோது, மறுபடியும் சமூக முனைப்புகளில் பங்களிக்க முடிவெடுத்தேன். இம்முறை செங்காங் சமூக மன்றத்தில்.
மூத்த தகவல்தொடர்பு நல்வாழ்வு தூதர் (SIWA), ஸ்கில்ஸ்ஃபியூச்சர் போன்ற திட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். சமூக மன்றத்தில் முதியோருக்கான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய இவற்றைப் பயன்படுத்த முடிவெடுத்தோம். SIWA திட்டம் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தந்ததைக் கண்டு நான் ஊக்கமடைந்தேன். அதே சமயத்தில், எனது அனுபவம் அனைத்தையும் மக்களுடன் என்னால் பகிர முடியும்.
SIWA தூதராக உங்களுக்குக் கிடைத்த ஆகப்பெரிய படிப்பினை என்ன?
எனக்கு மிகவும் முக்கியமானது முதியோர்களே. நம்மை எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்துவது பற்றி நாம் பேசினாலும், எதிர்பார்ப்புகளும் அவர்களுக்குள்ள திறன்களும் பொருந்தவில்லை. மனப்போக்கைப் பொறுத்தவரை, பழக்கப்படாதவை பற்றிய பயம் நிலவுகிறது. அவர்களுக்குத் தொழில்நுட்பம் பழக்கப்பட்டவுடன், நமது உலகில் அவர்களும் அங்கம் வகிப்பதாக அவர்கள் உணர்வார்கள்.
என் வயதில் என்னால் செய்யமுடியும் என்பதை அவர்களிடம் நான் நிரூபித்துக் காட்டும்போது, தங்களால் வல்லமை பெறமுடியுமா என்ற பயம் இருக்காது. நாங்கள் அவர்களது கைகளைப் பிடித்துக்கொண்டு, பரந்த உலகை நோக்கி வழிகாட்டும்போது அவர்களது தன்னம்பிக்கையும் கூடும். இது விளைவுகளின் அடிப்படையிலானதாக இருக்கவேண்டும். தங்களது முயற்சியின் பலன்களைக் காணும்போது, அதன் மதிப்பை அவர்கள் உணர்வார்கள்.
நீங்கள் எப்படி உங்களது மின்னிலக்கத் திறன்களைத் தொடர்ந்து புதுப்பிக்கிறீர்கள்?
என்னால் முடிந்த எல்லா வகுப்புகளிலும் நான் பங்குபெறுகிறேன். ஸ்கில்ஸ்ஃபியூச்சருடன் நான் $500 மட்டுமே செலவு செய்யமுடியும். அதனால் அடுத்த ஆண்டு இதைவிடக் கூடுதலான நிரப்புத்தொகை கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கிறேன். (சிரிக்கிறார்)
இப்போதெல்லாம் இணையம்வழி நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற விருப்பம் இருக்கும்வரை அறிவாற்றலுக்கான தேடலும் தொடரும். என்னைப் பொறுத்தவரை, நாம் நம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளும்போது, எதிர்காலத்தைப் பற்றிய நமது மனப்போக்கும் மேம்படும்.
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில செயலிகள் யாவை?
தகவல் பரிமாற்றத்திற்கு நான் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறேன். அதோடு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன��ற சமூக ஊடகச் செயலிகளிலும் நான் இருக்கிறேன்.
நான் என் கைப்பேசியை இணைய வங்கிச்சேவைக்கும் பயன்படுத்துகிறேன். இப்போதெல்லாம் என் வீட்டில் இருந்தபடியே சௌகரியமாகப் பணப் பட்டுவாடா செய்கிறேன். ஹோட்டல், விமானப்பயணம் போன்றவற்றுக்குப் பதிவு செய்யவும் இணையம்வழி பொருள் வாங்கவும் என் கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன்!
மின்னிலக்கமயமாகச் சிரமப்படுவோருக்கும், கற்றுக்கொள்ளத் தயங்குவோருக்கும் ஊக்கமளிக்க அவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
எதிர்காலத்தில் உலகோடு இணைந்திருக்க நீங்கள் எப்படி தயாராகப் போகிறீர்கள்? முதல் அடி எடுத்து வைப்பதுதான் எப்போதும் ஆகச்சிரமமானது. ஆனால் நீங்கள் அதைச் செய்துதான் ஆகவேண்டும். பயத்திற்கு எப்படி தீர்வு காணப் போகிறோம்? ஒரு தூதர் என்ற முறையில், நானும் உங்களைப் போலத்தான். நாம் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கை அனுபவங்களைக் கடந்து வந்திருப்பவர்கள்.
எனவே, நாம் விருப்பப்படும் விளைவுக்காக எளிய காரியங்களைச் செய்வதன்வழி, வெற்றிக்கான ஆணிவேர்களை நம்மால் ஊன்ற முடியும். கற்கவேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் முக்கியம். நாம் கற்றலின் நன்மைகளையும் பலனையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இல்லாவிடில், நாம் நிலைக்குத்திப்போய், காலத்திற்குப் பொருந்தாதவராகி விடுவோம். சமூகத்திற்குச் சிறந்த தூதராக இருக்க விரும்பும் 66 வயது ஆடவரான நான் சொல்லும் அறிவுரை இது.
SIWA திட்டம், மூத்தோர்கள் மின்னிலக்கமயமான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க உதவுகிறது. இதன்வழி, அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களும் அவ்வாறே செய்ய ஊக்கமளிக்கப்படுகிறது. திரு ரம்லியின் கதை உங்கள் வாழ்க்கையிலுள்ள யாரையேனும் உங்களுக்கு நினைவுபடுத்தினால், 2021 இரண்டாம் காலாண்டில் நடைபெறவிருக்கும் அடுத்த SIWA முன்மொழிவு நடவடிக்கையை நினைவில் கொள்ளுங்கள். மேலும் அறிய, இணையத்தளத்தை நாடுங்கள்.
2019-ல் நியமிக்கப்பட்ட மற்ற SIWA தூதர்களில் சிலரைப் பற்றி மேலும் அறிய, யூடியூப்-இல் எங்கள் காணொளியைப் பாருங்கள்.